இன்று காலை, பிரதமர் ஹரினி அமரசூரிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு சிறப்பு விஜயம் மேற்கொண்டார். கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கும் இந்த பயணத்தின் போது, அவர் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் நேரடியாகச் சந்தித்து அவர்களின் பார்வைகளை கேட்டறிந்தார்.
கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் மாணவர்களுடன் உரையாடிய பிரதமர், அவர்களின் கல்வி மற்றும் விளையாட்டு வசதிகளைப் பற்றிய கேள்விகளை முன்வைத்து, தேவையான உதவிகளை வழங்க அரசாங்கம் தொடர்ந்து செயல்படுவதாக உறுதியளித்தார்.
அதன் பின்னர், கல்லூரி அருங்காட்சியகத்தையும் மாணவர்களின் இணைப்பாட செயற்பாடுகளையும் பார்வையிட்ட பிரதமர், அங்கு ஒரு சிறப்பு உரையாற்றினார். கல்வியில் மாணவர்களின் ஆர்வத்தையும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் பேசிய அவர், நாட்டின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப மாணவர்களின் பங்கு முக்கியமானது என தெரிவித்தார்.
இதையடுத்து, கல்லூரி அதிபர் பிரதமருக்கு நினைவுப் பரிசொன்றை வழங்கி கௌரவித்தார். நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன், றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இன்றைய தினம், யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்வுகளிலும் பொதுமக்கள் சந்திப்புகளிலும் பிரதமர் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்தை பதிவிட