வட மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் பிரிக்கும் கொக்கிளாய் கடல் நீரேரி மீது ஒரு பாலம் அமைக்கப்பட்டால், அது பலதரப்பட்ட பயன்களை வழங்கும். தற்போது வட மாகாணத்திலிருந்து கிழக்கு மாகாணத்திற்குச் செல்ல வேண்டுமானால், சுமார் 30 கிலோமீட்டர் தூரம் சிங்கள கிராமங்கள் வழியாக சிக்கலான கிடங்கு கிண்டிப் பாதைகளை கடக்க வேண்டியுள்ளது. இதனால் நேரம் மற்றும் வாகன செலவு அதிகரிக்கிறது.
இந்தப் பாலம் அமைக்கப்படுவது பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, தமிழ் மக்களின் தினசரி வாழ்விலும் பெரும் நன்மைகளை ஏற்படுத்தும். கடந்த காலங்களில் இதற்காக சில முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால், சில சிங்கள புத்திஜீவிகள் மற்றும் இனமத சிந்தனையுடைய சக்திகளின் அழுத்தத்தினால் அந்த முயற்சிகள் தடையுற்றன.
தமிழ் அரசியல் தலைவர்கள், தேர்தல் காலங்களில் இனவாத கருத்துக்களை முழங்கினாலும், தமிழ் மக்களின் அத்தியாவசிய தேவைகளை புறக்கணித்துவிடுகிறார்கள். உண்மையில் அவர்கள் விரும்பியிருந்தால், தமிழர்களின் ஆதரவில்லாமல் ஆட்சி நடக்க முடியாத நிலை இருந்த காலத்திலேயே இந்தப் பாலம் உருவாக்கப்பட்டிருக்கும்.
இனியாவது தமிழ் மக்களின் நலனுக்காக, கொக்கிளாய் பாலம் அமைப்பதற்கான திட்டங்களை உருவாக்க அரசியல் தலைவர்கள் முன்வரவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழ் மக்களின் முக்கிய தேவைகளுக்கு தீர்வு காணும் நேரம் இது தான்!
கருத்தை பதிவிட