இலங்கையில் உள்ள வியட்நாம் தூதுவர் ட்ரின் தி டாம் (Trinh Thi Tam) அவர்கள் (பிப்ரவரி 24) பாராளுமன்றத்தில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்ரமரத்ன அவர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் குஷானி ரோஹணதீர அவர்களும் கலந்து கொண்டார்.
இரு நாடுகளுக்கிடையே நீண்ட காலமாக நிலவும் உறவுகள், பௌத்த கலாச்சாரம், பாரம்பரிய தொடர்புகள் மற்றும் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. இலங்கை-வியட்நாம் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தை 10வது பாராளுமன்றத்திற்காக மீள நிறுவுவது தொடர்பாகவும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
இதற்கிடையில், வியட்நாமின் வெற்றிகரமான வேளாண்மைத் தொழில்நுட்பம் பற்றியும், அந்த அனுபவங்களை இலங்கையுடன் பகிர்ந்து கொள்வதில் வியட்நாம் தயாராக உள்ளதாகவும் தூதுவர் தெரிவித்தார். சுற்றுலாத்துறையின் மேம்பாடு, இரு நாடுகளுக்கிடையிலான முதலீட்டு வாய்ப்புகள், மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் முயற்சிகள் குறித்தும் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், வியட்நாம்-இலங்கை இராஜதந்திர உறவுகள் 55வது ஆண்டை எட்டியுள்ள நிலையில், இரு நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்த பல புதிய திட்டங்கள் தயாராக உள்ளன என்றும் தூதுவர் குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பிற்கு தொடர்ச்சியாக, வியட்நாம் தூதுவர், பாராளுமன்ற பிரதியமைச்சர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்களையும் சந்தித்தார். இரு நாடுகளுக்கும் பொதுவான ஆர்வம் உள்ள துறைகளில் மேலும் இணைந்து செயல்படுவது முக்கியம் எனவும், வெளிநாட்டு முதலீடுகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கும் இலங்கை அரசின் தற்போதைய முடிவை வியட்நாம் ஆதரிக்கிறது என்றும் தூதுவர் தெரிவித்தார்.
இலங்கையின் 10வது பாராளுமன்றத்தில் பெண்களின் அதிகளவான பிரதிநிதித்துவம் ஒரு முக்கிய முன்னேற்றமாகும் என்று பிரதியமைச்சர் இதன்போது வலியுறுத்தினார் என பாராளுமன்றம் செய்தி வெளியிட்டுள்ளது.
கருத்தை பதிவிட