மழை மற்றும் அனர்த்தங்களால் கடந்த காலத்தில் ஏற்பட்ட விவசாய சேதங்களுக்கு நட்டஈடு வழங்கும் பணிகளை விரைவாக முடிக்குமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி இந்த உத்தரவை இன்று (06) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது, விவசாயம், கால்நடைகள், நிலம் மற்றும் நீர்வள அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடும் போது வழங்கியுள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் முன்மொழிவுகளின் கீழ், விவசாயம், கால்நடைகள், நிலம் மற்றும் நீர்வள அமைச்சிற்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் சரியான முறையில் சம்பந்தப்பட்ட திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்காகவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
விவசாயத் தரவுகளில் காணப்படும் குறைபாடுகள் காரணமாக, தீர்மானங்கள் எடுக்கும் போது ஏற்படும் தவறுகளைத் தவிர்க்க வேண்டும் என ஜனாதிபதி அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தார்.
விவசாய உற்பத்திகளுக்காக சந்தையில் நியாயமான விலை வழங்கி விவசாயிகளை பாதுகாப்பதுடன், நுகர்வோருக்கும் நியாயமான விலைகள் உறுதி செய்யப்பட வேண்டியது குறித்து இந்நிகழ்வில் விவாதிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கால்நடை வள அபிவிருத்திக்கான நடவடிக்கைகள், ஏற்றுமதி விவசாயப் பயிர்களின் வளர்ச்சி, மில்கோ நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் அதன் முன்னேற்றம் பற்றிய விஷயங்களும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டன.
கருத்தை பதிவிட