ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசு, இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் நிறுவனம், சிலோன் பெவரேஜஸ், 25 ஏக்கர் நிலத்தை இலவசமாக பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து, சர்ச்சையில் சிக்கியுள்ளது.
இந்த நிறுவனம் பஞ்சாப் மாநிலத்துக்கு அருகிலுள்ள கதுவா மாவட்டத்தின் பக்தாலி தொழிற்சாலையில் ₹1,642 கோடி (இலங்கை ரூபாவில் 5569 கோடி) முதலீடு செய்து அலுமினிய கேன் உற்பத்தி மற்றும் பானங்கள் நிரப்பும் யூனிட் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த விவகாரம், கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் முகம்மது யூசுப் தரிகாமி, சட்டசபையில் நில ஒதுக்கீடு குறித்த கேள்வி எழுப்பியபோது வெளிச்சத்திற்கு வந்தது. ஆனால், விவசாயத் துறை அமைச்சர் ஜாவீத் அஹ்மத் தார், நில ஒதுக்கீடு தொடர்பாக தகவல் இல்லை என மறுத்தார்.
இந்த விவகாரத்தின் மையப் புள்ளி, இந்த 25 ஏக்கர் நிலம் ஜம்மு மற்றும் காஷ்மீர் தொழில்துறை கொள்கையின் கீழ் இலவசமாக ஒதுக்கப்பட்டதாகும். இந்தக் கொள்கை, 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நில ஒதுக்கீடு, பலர் நில உரிமை கொண்டிருப்பதாகக் கூறும் இடத்தில் நடைமுறையில் வந்துள்ளதால், உள்ளூர் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். அவர்கள் இந்தப் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
முரளிதரனின் நிறுவனம் இந்தியாவின் கர்நாடகாவில் ஏற்கனவே ஒரு தொழிற்சாலை நடத்தி வருகிறது, மேலும் ஜம்மு மற்றும் காஷ்மீரிலும் தனது வரம்பை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி நில ஒப்பந்தம் கையெழுத்தாகியதாகத் தகவல் கிடைத்துள்ளது. சிலோன் பெவரேஜஸ், இலங்கையின் மிகப்பெரிய பானங்களை தயாரிக்கும், நிரப்பும் மற்றும் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஆகும். இது கோகா-கோலா, நெஸ்லே போன்ற உலகளாவிய நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பானங்கள் வழங்குகிறது.
ஜம்மு மற்றும் காஷ்மீர் தொழில்துறை கொள்கை ஏப்ரல் 1, 2021 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் முதலீட்டு ஊக்கவுத்தொகை, இயந்திரங்கள் வாங்குவதற்கான ஜிஎஸ்டி வரிவிலக்கு, மற்றும் பணம் திருப்ப உதவிகள் போன்ற பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதன் நோக்கம், பெரிய முதலீடுகளை ஈர்த்து, வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகும்.
இந்தக் கொள்கையின் மூலம், துபாய் மையமாக செயல்படும் எமார் குழுமம், இந்தியாவின் கந்தாரி பெவரேஜஸ் போன்ற நிறுவனங்கள் ₹1.23 லட்சம் கோடி முதலீடு செய்ய ஆர்வம் காட்டியுள்ளன.
கதுவா மாவட்டம், பஞ்சாப் மற்றும் ஹிமாச்சல் பிரதேசத்துக்கு அருகில் இருப்பதால், பல தொழில்துறை திட்டங்களுக்கு முக்கியமான இடமாக மாறியுள்ளது.
தரிகாமி, யூனியன் பிரதேசத்தில் உருவாக்கப்படும் செயற்கை நகரங்கள் (satellite townships) பற்றிய விவாதத்தின் போது இந்த விவகாரத்தை முன்வைத்தார். “இந்த நகரங்கள் யாருக்காக? யார் வசிக்கப்போகிறார்கள்? இலங்கை கிரிக்கெட் வீரருக்கு ஒரு ரூபாயும் செலுத்தாமல் நிலம் வழங்கப்பட்டிருக்கிறது,” என்று அவர் கண்டனம் தெரிவித்தார்.
காங்கிரஸ் எம்எல்ஏ குலாம் அஹ்மத் மிர், தரிகாமியின் கருத்துக்களை ஒப்புக்கொண்டு, இது சட்டசபையில் தீவிரமாகப் பேசப்பட வேண்டிய பிரச்சினை எனக் கூறினார்.
இது குறித்து பதிலளித்த விவசாயத் துறை அமைச்சர் ஜாவீத் அஹ்மத் தார், இந்த விவகாரம் வருவாய் துறையின் பொறுப்பில் உள்ளது என்று கூறினார். “இதுகுறித்து நாம் தகவல்களைத் திரட்டிப் பார்ப்போம்,” என்று அவர் உறுதியளித்தார்.
370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு, ஜம்மு மற்றும் காஷ்மீரில் நில ஒதுக்கீடு தொடர்பாக ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. ஆனால், ஒரு புகழ்பெற்ற வெளிநாட்டு நபர் முரளிதரன் இதில் தொடர்புபட்டிருப்பது, இந்த விவாதத்தை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
இதற்கு பதிலளிக்கும்விதமாக, ஒரு அரசு அதிகாரி, முரளிதரனின் முதலீடு, ஜம்மு மற்றும் காஷ்மீரை ஒரு தொழில்துறை மையமாக மாற்றுவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாகவே இருக்கிறது என்று கூறினார். அத்துடன், வெளிநாட்டு முதலீடுகள், பொருளாதார வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்பு உருவாக்கத்திற்கும் அவசியம் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
(Daily Mirror)
கருத்தை பதிவிட