மார்க்ஹாம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட இரட்டை துப்பாக்கிச்சூட்டில் 20 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் 26 வயது ஆண் ஒருவர் தீவிரமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை காலை 6:30 மணியளவில் சாலஸ் ரோடில், Highway 48 மற்றும் Castlemore Avenue அருகே உள்ள ஒரு வீட்டில் நடைபெற்றதாக யோர்க் பகுதி போலீசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரும் துப்பாக்கிச்சூட்டுக்கு உள்ளாகி பரிதாபகரமாக கிடப்பதை கண்டனர். 20 வயது நிலாக்ஷி ரகுதாஸ் (Nilakshi Raguthas) என்பவரே உயிரிழந்ததாக போலீசார் உறுதி செய்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு ஜெர்மன் ஷெபர்டு நாயும் மரணமடைந்துள்ளது.
இதற்கு முன்பும் குற்றவாளிகள் ஒரே வீட்டை இலக்கு வைத்துள்ளனர்
இந்த வீடு கடந்த ஒராண்டில் பலமுறை இலக்கு வைக்கப்பட்டு தாக்குதலுக்குள்ளாகியுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். 2018 முதல் இந்த வீட்டுக்கு ஐந்து முறை போலீசார் அழைக்கப்பட்டுள்ளனர், அதில் மூன்று முறை கடந்த ஆண்டு நடந்த சம்பவங்கள்.
சம்பவ இடத்தில் இருந்து இரண்டு சந்தேகநபர்கள் புதிய மாடல், கருப்பு நிற Acura TLX செடான் காரில் தப்பிச் சென்றதாக தகவல் உள்ளது.
இந்த வழக்கை யோர்க் பகுதி போலீசாரின் கொலைவழக்கு விசாரணைப் பிரிவு ஏற்றுள்ளது. எனினும், குற்றம் சம்பந்தமான முக்கிய காரணங்களை பற்றி தற்சமயம் சொல்ல முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் உதவியை கோரும் போலீசார்
யாரேனும் தகவல் தெரிந்தால் அல்லது வீட்டின் அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா வீடியோக்கள் இருந்தால், York Regional Police-ஐ தொடர்புகொண்டு அல்லது Crime Stoppers மூலம் தகவல் வழங்கும்படி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மூலம்: CBC News
Update -1
உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தின் முன்னாள் நகரபிதா ஆல்பிரட் துரையப்பாவின் பேத்தி எனத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் கோண்டாவிலிருந்து கனடாவுக்குச் சென்ற இந்த பெண் இரண்டு வருடங்கள் அந்த வீட்டில் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைகளை மார்க்கம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்தை பதிவிட