திருச்சிராப்பள்ளி (தமிழ்நாடு) மற்றும் யாழ்ப்பாணம் (இலங்கை) இடையே நேரடி விமான சேவை இன்று 47 ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கியது.
போர்நிலைக்காரணமாக யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால், 2019-ஆம் ஆண்டு விமான நிலையம் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது. அதன்பிறகு, சென்னை – யாழ்ப்பாணம் இடையே பயணிகள் விமானங்கள் இயக்கப்பட்டன.
தமிழ்நாட்டின் பிற நகரங்களிலிருந்து, குறிப்பாக திருச்சிராப்பள்ளியிலிருந்து, யாழ்ப்பாணத்திற்கான விமான சேவைகளை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன் அடிப்படையில், தற்போது திருச்சிராப்பள்ளி – யாழ்ப்பாணம் விமான சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த விமானம் மதியம் 1:25 மணிக்கு திருச்சிராப்பள்ளியிலிருந்து புறப்பட்டு, 2:25 மணிக்கு யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை அடையும். அதேபோல், யாழ்ப்பாணத்திலிருந்து 3:05 மணிக்கு புறப்பட்டு, 4:05 மணிக்கு திருச்சிராப்பள்ளி வந்தடையும்.
இந்த சேவையை இண்டிகோ ஏர்லைன்ஸ் (IndiGo Airlines) இயக்கும்.
திருச்சிராப்பள்ளி – யாழ்ப்பாணம் இடையிலான விமான பயணத்திற்கான பயணக் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வழிப் பயணத்திற்கு ரூ. 20422.00 முதல் ரூ. 22153.00 வரை இருக்கலாம்.
இன்று முதல் பயணத்தில், மொத்தம் 27 பயணிகள் பலாலி விமான நிலையத்தை 2:02 மணிக்கு வந்தடைந்தனர். மேலும், பலாலியிலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு 36 பயணிகளுடன் விமானம் மதியம் 3:00 மணியளவில் புறப்பட்டது.
இந்த முதல் விமான சேவையை முன்னிட்டு, இந்திய துணை தூதரக அதிகாரி சாய் முரளி தலைமையிலான குழு கேக் வெட்டி கொண்டாடியது.
கருத்தை பதிவிட