கொழும்பு, மே 8: கொட்டாஞ்சேனையை சேர்ந்த 10ஆம் தர மாணவியொருவரின் தற்கொலை சம்பவத்திற்கு தொடர்ச்சியாக, கல்வி அமைச்சு முதற்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
கல்வி அமைச்சின் தகவலின்படி, மாணவியிடம் பாலியல் தவறில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படும் ஆண் ஆசிரியர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் குற்றச்சாட்டுகள் எதிர்கொள்ளும் பாடசாலை அதிபரிடம் விரைவில் விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை பம்பலப்பிட்டியாவிலுள்ள ராமநாதன் இந்து மகளிர் கல்லூரிக்கு வெளியே பதற்றமான நிலை உருவானது. மாணவியின் மரணத்திற்கு நீதி கோரி மக்களால் நடத்தப்பட்ட போராட்டம் டூப்ளிகேஷன் வீதியில் கடும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது.
சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணை அறிக்கையை கல்வி அமைச்சு கோரியுள்ளது. அதனை அடிப்படையாகக் கொண்டு மேலும் கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சு உறுதிபட தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மாணவியின் மரணத்திற்கான சூழ்நிலைகள் தொடர்பாக பொலிஸாரும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக மக்களிடையே தீவிர கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கருத்தை பதிவிட