இலங்கையில் நடுத்தர வர்க்க மக்களின் வாகனம் கொள்வனவு செய்யும் கனவு எட்டாக்கனியாகவே உள்ளது. வாகனங்களின் விலைகள் உச்சத்தை தொட்டும் இன்னும் விலை உயர்வு மேலும் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.
இலங்கையின் வாகன சந்தை கடந்த சில வருடங்களாக கடுமையான சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. வெளிநாட்டு நாணய பற்றாக்குறை, அரசாங்கத்தின் வரியியல் கொள்கைகள், மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் ஆகியவை சந்தையை பெரிதும் பாதித்துள்ளன. சமீபத்தில் வாகன இறக்குமதிக்காக ஒதுக்கப்பட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர்களில், சுமார் 800 மில்லியன் டொலர்களுக்கான கடிதச் சான்றிதழ்கள் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், மீதமுள்ள 200 மில்லியன்அமெரிக்க டொலர்கள் பற்றிய நிலைமை தெளிவில்லாத நிலையில் உள்ளது. இந்த நிதித் தொகையை முறையாக பயன்படுத்த அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் பிரசாத் மெனேஜ் கூறுகிறார். அவர் மேலும், இதற்கான புதிய நிபந்தனைகள் விதிக்கப்படுமாயின் உள்நாட்டு வாகன விலைகள் மீண்டும் கூடியளவில் உயரலாம் என்றும் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், குறைந்தது 9,000 வாகனங்கள் நாட்டுக்குள் ஏற்கனவே கொண்டு வரப்பட்டுள்ளன. இருப்பினும், சந்தையின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த, இறக்குமதிகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் தெளிவாகவும், இடையூறு இன்றியும் இருக்க வேண்டியது அவசியமாகின்றது.
மேலும், உள்ளூரில் வாகனங்களைப் பொருத்தும் assembling திட்டங்களுக்கு அளிக்கப்பட்ட வரிச்சலுகைகள் நாட்டுக்குப் பெரிதாக பயனளிக்கவில்லை எனவும், அவை எளிதில் வெளிநாட்டு நாணயத்தை வெளியில் செலவழித்து உள்ளதாகவும், இது வாகன ஏற்றுமதிக்கு பங்களிப்பு செய்யப்படவில்லை எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
எனவே, அரசாங்கம் தற்காலிக நிதியினை தனிப்பட்ட குழுக்களுக்கு ஆதரவாக பயன்படுத்தாமல், சந்தையின் சமநிலையை பேணும் வகையில் திறந்த மற்றும் சீரான கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். வாகன இறக்குமதி தொடர்பான எதுவொரு முடிவும், பொதுமக்களின் தேவைகள் நிதி நிலைமை மற்றும் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு எடுக்கப்பட வேண்டும்.
இந்தச் சூழ்நிலையில், வாகன வர்த்தக துறையில் நம்பகத்தன்மையும் நிலைபெறும் கிடைக்க, அரசாங்கத்துடன் வாகன இறக்குமதியாளர்கள் தெளிவான கலந்துரையாடல்களை மேட்கொள்ளவேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது.
கருத்தை பதிவிட