வவுனியா, கூமாங்குளம் – 11.07.2025
வவுனியா மாவட்டத்தில் நேற்று (11) இரவு நடந்த பரிதாபகரமான சம்பவம், தற்போது பிரதேசத்தில் பெரும் பதற்றத்தையும், மக்களிடையே கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கூமாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுமார் 10 மணியளவில், போக்குவரத்து பொலிசாரால் துரத்தப்பட்டு, மோட்டார் சைக்கிளில் பயணித்த 58 வயதுடைய இராமசாமி அந்தோணிப்பிள்ளை என்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பொலிசார் துரத்தியபோது உயிரிழப்பு!
சம்பவம் நேர்ந்த இடத்தில் உள்ள மதுபான விற்பனை நிலையம் அருகே, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த பொலிசார், அப்பால் சென்ற ஒரு பொதுமகனை வாகன சக்கரத்துக்குள் தடியால் செருகியுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. இதனால் நிலை தடுமாறிய அவர் சாலையிலே விழுந்து உயிரிழந்ததாக பிரதேசவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மக்கள் கொதித்தனர் – பொலிசாரின் வாகனங்கள் சேதம்!
சம்பவத்தைக் கண்டு சோகமும் கோபமும் ஏற்பட்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள், உடனடியாகச் சம்பவ இடத்தில் கூடி, பொலிசாரின் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் ஒரு வாகனத்தையும் சேதப்படுத்தினர். மேலும், ஒருபொலிஸ் உத்தியோகத்தரை நீண்ட நேரம் சிறைப்பிடித்து வைத்தனர்.
சடலத்தை அகற்ற மறுத்த மக்கள் – நீதிபதி வரவேண்டும் என வலியுறுத்தல்!
உயிரிழந்தவரின் சடலத்தை அகற்ற அல்லது காவல்துறை விசாரணைக்கு அனுமதிக்க முடியாது என மக்கள் வலியுறுத்தினர். நீதிபதி நேரில் வரும்வரை சடலத்தை அகற்ற அனுமதிக்கமாட்டோம் என தெளிவாகக் கூறினர்.
பதற்றமான சூழ்நிலையில் பொலிசாரின் திணறல்!
வவுனியா சிரேஸ்ட் பொலிஸ் அத்தியட்சகர் சம்பவ இடத்திற்கு வருகை வந்து, சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடைபெறும் என உறுதியளித்த போதும், மக்கள் நீதிமன்ற அதிகாரியின் வருகையை வலியுறுத்தி போராட்டத்தைத் தொடர்ந்து மேற்கொண்டனர். இதனால் பொலிசார் நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.
திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணையின் பின்னர் சடலம் அகற்றம்
இந்நிலையில், திடீர் மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்கு வந்து மரணம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்ததன் பின்னரே, மக்கள் கடும் எதிர்ப்புகளிடையே சடலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
கலவரம் கட்டுப்பாட்டுக்கு விசேட அதிரடிப் படையினர் களத்தில்!
சம்பவ இடத்தில் பெருந்தொகை பொலிசார், கலக தடுப்புப் படையினர் மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
தற்போதைய நிலை
இது தொடர்பான விசாரணைகள் வவுனியா பொலிஸாரினால் தொடரப்பட்டு வருகின்றன. உயிரிழந்தவரின் அருகில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தரின் பெயருடன் காணப்பட்ட இலச்சினை பொருளும் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளது. பிரதேச மக்கள் இதற்காக நேர்மையான விசாரணையும் நீதியும் வேண்டுகின்றனர்.
கருத்தை பதிவிட