இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு ஒப்படைக்கப்பட்ட மண்டினு பத்மசிறி அலியாஸ் ‘கெஹெல்பட்டற பத்மே’ மற்றும் அவரது நெருங்கியவர்களுக்கு எதிராக முழுமையான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்,
கடந்த ஆகஸ்ட் 27ஆம் திகதி இந்தோனேசிய போலீஸும் இன்டர்போலும் இணைந்து நடத்திய நடவடிக்கையின் போது கெஹெல்பட்டற பத்மே, கமாண்டோ சலிந்த, பனதுற நிலங்க, பேக்கோ சமன் மற்றும் தம்பிலி லஹிரு உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பத்மே, சலிந்த மற்றும் நிலங்க ஆகியோர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மற்றும் இருவர் மேற்கு மாகாண குற்றப்பிரிவு காவல் துறையினரின் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இன்று (31) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இந்நிலையில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) இன்று காலை (31) விசேட நிகழ்ச்சி ஒன்றின் போது கைது நடவடிக்கையில் பங்காற்றிய இந்தோனேசிய அதிகாரிகள் பாராட்டப்பட்டனர்.
அமைச்சர் விஜேபால ஊடகங்களிடம் பேசியபோது “அரசியல் ஆதரவோ, பாதுகாப்போ இனி எந்த குற்றக் குழுவுக்கும் வழங்கப்படமாட்டாது. நாட்டை ஒடுக்கி வந்த பாதாள உலகச் செயல்பாடுகளுக்கு முழுமையான முற்றுப்புள்ளி வைக்கப்படும்” என்று வலியுறுத்தினார். மேலும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து வேகமான வழக்கு விசாரணைகள் நடத்தும் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, சட்டவிரோத சொத்து மற்றும் நிதி விசாரணைகளும் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக விசாரணை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கருத்தை பதிவிட