கடந்த இரண்டு நாட்களாக வலிகாமம் பிரதேச சபை உத்தியோகத்தர்களின் உரையாடல் ஆடியோவும் அதனைச் சுற்றியுள்ள ஊகச் செய்திகளும் சில சமூக ஊடகங்களிலும் இணையதளங்களிலும் பரவலாகப் பரப்பப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்பாக, பிரதேச சபை உத்தியோகத்தர்களின் நெருக்கமானவர்களிடமிருந்து சில நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன.
- தொலைபேசியில் அழைப்பு விடுத்த நபர், ஆதனப் பெயர் மாற்றம் தொடர்பான ஆவணங்களை பிரதேச சபை உப அலுவலகத்தில் கையளித்துள்ளார். பெயர் மாற்றம் செய்யப்படுவதற்கு பின்வரும் நடைமுறைகள் அவசியமாகின்றன:
- உப அலுவலக உத்தியோகத்தர்கள் ஆவணங்களை பரிசீலித்து தலைமை அலுவலகத்திற்கு அனுப்புதல்.
- தலைமை அலுவலக உத்தியோகத்தர்கள் ஆவணங்களை ஆய்வு செய்தல்.
- உள்ளுராட்சித் திணைக்கள விசாரணை அதிகாரி ஆவணங்களை ஆராய்தல்.
- சட்ட ஆலோசனை பெறுதல்.
- அனைத்தும் சரியானால் பெயர் மாற்ற உத்தரவு வழங்குதல்.
இவ்வாறு பல்வேறு கட்டங்களில் செயல்முறை நடை பெறும். ஆனால் குறித்த நபர், ஆவணங்களை கையளித்த நாளிலிருந்து இடைவிடாமல் அலுவலகத்திற்கு அழைப்புகளைச் செய்துகொண்டிருந்தார்.
அந்த குரல் பதிவான தினத்தில் கூட, அவர் தனது அடையாளத்தை வெளிப்படுத்தாமல், தேவையைத் தெரிவிக்காமல், ஒரு பெண் உத்தியோகத்தரின் பெயரைச் சொல்லி அவரின் தனிப்பட்ட விடயங்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்த நேரத்தில் அழைப்பை ஏற்ற உத்தியோகத்தர் எந்த தவறான விடயத்தையும் கூறவில்லை. மேலும் சமூக ஊடகங்களில் குறிப்பிடப்பட்ட “சுலக்சனா” என்ற உத்தியோகத்தர் அந்த அழைப்பை ஏற்றவரே அல்ல என்பது உறுதியான தகவல். பிறிதொரு உத்தியோகத்தரே அந்த அழைப்பை ஏற்றுப் பேசியுள்ளார்.
பிரதேச சபை உத்தியோகத்தராக பணியாற்றும் பெண்ணின் பெயரைத் தொடர்பில்லாத விடயத்தில் பொது வெளியில் வெளியிட்டு அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியமை குறித்த நபரின் தவறாகும்.
மேலும், வம்பன் நெட் எனும் இணைய ஊடகம், உண்மையை ஆராயாமல், பதிவிட்ட ஆடியோவை அடிப்படையாகக் கொண்டு மரியாதையற்ற வார்த்தைகளுடன் செய்தி வெளியிட்டுள்ளது. இது குடும்பப் பெண்ணான உத்தியோகத்தருக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதோடு, அவரது குடும்பத்திலும் சிக்கல்களை உருவாக்கக்கூடியது.
சேவைகள் வழங்கப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டால், பொதுமக்கள் நேரடியாக திணைக்களத் தலைவர்களையோ பொறுப்பான அதிகாரிகளையோ தொடர்புகொண்டு விளக்கம் பெற வேண்டும். ஏனெனில் அனைத்து செயல்முறைகளுக்கும் திணைக்களத் தலைவரே பொறுப்பானவர்.
இவ்வாறான செயல்கள், மக்களுக்கு நலன்புரி சேவைகளைச் செய்வதற்கு தடையாகவும் தடைபாடாகவும் அமைகின்றன.
கருத்தை பதிவிட