இலங்கை அரசாங்கம் பள்ளி நேரத்தை பிற்பகல் 2.00 மணி வரை நீட்டிக்கும் தீர்மானத்தை மாற்றாவிடில், டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
“இந்தத் தீர்மானம் ஆசிரியர்களின் உடல், மன ஆரோக்கியத்தையும் மாணவர்களின் கல்வி தரத்தையும் பாதிக்கும். எனவே நாங்கள் அரசுக்கு நவம்பர் 7 ஆம் தேதி வரை அவகாசம் வழங்குகிறோம். அந்த தேதிக்குள் தீர்மானம் மாற்றப்படாவிடில், எங்களது அனைத்து சங்கங்களும் இணைந்து தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்” என தெரிவித்தார்.
அதேவேளை “இந்தத் தீர்மானம் கல்வி மேம்பாட்டிற்காகவும் பாடத்திட்டத்தில் உள்ள அழுத்தத்தை சமன்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆசிரியர் சங்கங்களுடன் கலந்துரையாடி தீர்வு காண்போம்” என கல்வி அமைச்சர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
ஆனால் ஆசிரியர் சங்கங்கள் இதனை ஏற்க மறுத்துள்ளன. “அரசாங்கம் கல்வி அமைப்பை மாற்றம் செய்யாமல், கல்விச் சுமையைக் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களின் மேல் திணிக்க முயல்கிறது. இதற்கு எதிரான போராட்டத்தை தவிர வேறு வழியில்லை. இந்த நிலை தொடருமானால், டிசம்பர் மாதத்தின் ஆரம்பத்திலேயே இலங்கையின் கல்வி துறை பெரிய அளவில் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது என ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கருத்தை பதிவிட