தென் பேருவில் இன்று (புதன்கிழமை) அதிகாலை மற்றொரு வாகனத்துடன் மோதியதையடுத்து பயணிகள் பஸ் ஒன்று ஆழமான பள்ளத்தில் விழுந்ததில் குறைந்தது 37 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 13 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரிகுவிபா மாகாண சுகாதார மேலாளர் வால்தர் ஒபோர்டோ, உள்ளூர் வானொலி RPP-க்கு அளித்த தகவலின்படி, பஸ் ஒன்று பிக்கப் வாகனத்துடன் மோதிய பின்னர் வளைவு பகுதியில் சாலையை விட்டு விலகி, சுமார் 200 மீற்றர் (650 அடி) ஆழத்தில் உள்ள ஒகோன்யா ஆற்றங்கரைக்குத் தாறுமாறாக விழுந்துள்ளது.
அந்த பஸ் தென் பேருவின் சுரங்கத் தொழில்களுக்கு பிரசித்தமான சலா நகரிலிருந்து புறப்பட்டு, அரிகுவிபா நகரை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்தது.
பேருவில் பஸ் விபத்துக்கள் அடிக்கடி நடைபெறுகின்றன. இன்றைய விபத்தின் துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றாலும், கடந்த காலங்களில் பெரும்பாலான விபத்துகளுக்குக் காரணமாக ஓட்டுநர்களின் கவனக்குறைவு மற்றும் அதிக வேகம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நெடுஞ்சாலையில் கவிழ்ந்த பஸ் விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். அதற்கு முன்னர் ஜூலை மாதத்தில் லிமாவிலிருந்து பேருவின் அமேசான் மாகாணத்திற்குச் சென்ற பஸ் கவிழ்ந்ததில் குறைந்தது 18 பேர் உயிரிழந்ததுடன், 48 பேர் காயமடைந்தனர்.
மேலும், ஜனவரி மாதத்தில் பஸ் ஒன்று ஆற்றில் விழுந்ததில் 6 பேர் உயிரிழந்ததுடன் 32 பேர் காயமடைந்தனர்.
2024 ஆம் ஆண்டில் பேருவில் சாலை விபத்துகளால் சுமார் 3,173 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த தென் அமெரிக்க நாட்டின் Death Information System வெளியிட்ட உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கருத்தை பதிவிட