ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருந்தாலும், உண்மையை வெளிக்கொணரும் அரசின் முயற்சி எவ்விதத்திலும் தடுக்கப்படமாட்டாது என்று அதிபர் அனுர குமார திசாநாயக்கே இன்று (செவ்வாய்) பாராளுமன்றத்தில் உறுதிபட தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், முக்கிய அறிக்கைகளிலிருந்து சில பக்கங்கள் கிழிக்கப்பட்டு அகற்றப்பட்டிருந்ததை ஒப்புக்கொண்டார். எனினும், அரசு ஏற்கனவே புதிய ஆதாரங்களை சேகரிக்கும் பணியை வேகமாக முன்னெடுத்து வருவதாக கூறினார்.
“ஆதாரங்களை அழித்தாலும் உண்மையை அழிக்க முடியாது. நாங்கள் உண்மையை கண்டுபிடிப்போம்,” என்று அதிபர் வலியுறுத்தினார்.
CID மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்த அதிபர், CID தலைவர் ஷானி அபெசேகர மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி சேனவிரத்ன ஆகியோர் இரவும் பகலும் உழைத்து உண்மையை வெளிக்கொணர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று குறிப்பிட்டார்.
“அவர்கள் விரைவில் உண்மையை நாட்டிற்கு முன்வைப்பார்கள்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் புதிய முறைமைகள், புதிய ஆதாரங்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பும் பயன்படுத்தப்படுமென அதிபர் அறிவித்துள்ளார்.
கருத்தை பதிவிட