இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த இந்தியாவின் மத்திய அரசு பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் இலங்கைக்கு வழங்கி வரும் ஆதரவுகளை அவர் பாராட்டினார். அதேவேளை, தென்னிந்திய அரசியல்வாதிகள் இலங்கையை திறந்த மனப்பாங்குடன் பார்வையிட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே, அரசியலில் செயற்பாட்டளவில் காலடி எடுத்து வைக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மற்றும் பிரபல நடிகர் விஜய் அவர்களுக்கு, நாமல் ராஜபக்ச தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
விஜயின் திரைப்படப் பயணத்தை பாராட்டிய அவர், அவரது உற்சாகமும் ஆற்றலும் இனி சினிமாவிற்கு குறைவாக இருக்கும் என்றும், அரசியல் பாதையில் அவர் வெற்றி பெற வாழ்த்துவதாகவும் தெரிவித்தார்.
சில விடயங்களில் தமக்கு விஜயுடன் ஒரே கருத்துகள் இல்லாவிட்டாலும், இளைஞர்களும் ஆற்றல்மிக்க தலைவர்களும் அரசியலில் இணைவது இப்பகுதியின் எதிர்காலத்திற்கு முக்கியமானது என நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.
மேலும், விஜயையும் தென்னிந்திய அரசியல்வாதிகளையும் இலங்கையை நேர்மறையாக அணுகி, மலையக தமிழ் சமூகத்தின் முன்னேற்றத்திற்கான முயற்சிகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
கருத்தை பதிவிட