சமூக ஊடகங்களிலும், தகவல் பரிமாற்ற செயலிகளிலும் தற்போது பரவி வரும் “பொலிஸ் அறிவிப்பு” என்ற தலைப்புடன் கூடிய, பாதுகாப்பு தொடர்பான வழிமுறைகள் அடங்கிய ஒரு செய்தி, இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதல்ல என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
அந்த செய்தியில் பயன்படுத்தப்பட்டுள்ள உள்ளடக்கம், சொற்கள் மற்றும் வழங்கப்பட்டுள்ள உத்தரவுகள் அங்கீகாரம் பெறாததும், தவறானதும் என்பதால், அதை அதிகாரப்பூர்வ பொலிஸ் அறிவிப்பாக பொதுமக்கள் கருத வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடு முழுவதும் சட்ட ஒழுங்கை நிலைநாட்டவும், அனைத்து குடிமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யவும் இலங்கை பொலிஸ் முழுமையாக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது என்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மேலும், அரசு நிறுவனங்களின் பெயரில் வெளியாகும் தகவல்களை, பகிர்வதற்கு முன் அவற்றின் உண்மை தன்மையை உறுதி செய்யுமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ பொலிஸ் அறிவிப்புகள் கீழ்க்கண்ட சரிபார்க்கப்பட்ட வழிகளிலேயே வெளியிடப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது:
இலங்கை பொலிஸ் அதிகாரப்பூர்வ இணையதளம்
பொலிஸ் ஊடகப் பிரிவின் செய்தி அறிக்கைகள்
இலங்கை பொலிஸின் சரிபார்க்கப்பட்ட சமூக ஊடக கணக்குகள்
அங்கீகரிக்கப்பட்ட ஊடக நிறுவனங்கள்
உறுதிப்படுத்தப்படாத அல்லது பொய்யான தகவல்களை பரப்புவது தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தி, பொதுச் சட்ட ஒழுங்குக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் பொதுப் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கை பொலிஸ் தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும், நாட்டில் அமைதி, ஒற்றுமை மற்றும் சட்டப்பூர்வ நடத்தை நிலவ பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பை வேண்டுவதாகவும் தெரிவித்துள்ளது.
கருத்தை பதிவிட