வெளிநாட்டு வேலைவாய்ப்பின் 40 ஆண்டு வரலாற்றில் முதன்முறையாக, 2025ஆம் ஆண்டில் இலங்கைக்கு கிடைத்த வெளிநாட்டு தொழிலாளர்களின் பணப்பரிவர்த்தனை (Remittances) சாதனை அளவை எட்டியுள்ளது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) அறிவித்துள்ளது.
பணியகத்தின் தகவலின்படி, 2025 ஜனவரி முதல் டிசம்பர் வரை அமெரிக்க டொலர் 8.07 பில்லியன் (சுமார் ரூ. 2,432 பில்லியன்) இலங்கைக்கு கிடைத்துள்ளது. இது 2024ஆம் ஆண்டில் பெறப்பட்ட அமெரிக்க டொலர் 6.575 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 22.8 சதவீத அதிகரிப்பாகும்.
2025 டிசம்பர் மாதத்தில் வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்கள் அமெரிக்க டொலர் 879.1 மில்லியன் தொகையை அனுப்பியுள்ளதுடன், இது இதுவரை பதிவான அதிகூடிய மாதாந்த பணப்பரிவர்த்தனையாகும்.
இந்த வளர்ச்சிக்கு, தரமான மற்றும் திறமையான தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் அரசாங்கத்தின் கொள்கைகள் முக்கிய காரணமாகும் என SLBFE தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 3 இலட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பிற்காக சென்றுள்ளனர்.
வெளிநாட்டு தொழிலாளர்களின் பணப்பரிவர்த்தனையில் காணப்படும் இந்த தொடர்ச்சியான உயர்வு, இலங்கையின் வெளிநாட்டு நாணய கையிருப்பை வலுப்படுத்துவதோடு, நாட்டின் மொத்த பொருளாதாரத்திற்கும் பெரும் ஆதரவாக அமைந்துள்ளது எனவும் பணியகம் வலியுறுத்தியுள்ளது.
கருத்தை பதிவிட