கிளிநொச்சி – முல்லைத்தீவு (A35) பிரதான வீதியில் இன்று மாலை இடம்பெற்ற ஒரு பயங்கரமான வாகன விபத்து, விசுவமடுப் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட இந்த விபத்தில் காரில் பயணித்த நால்வர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கிளிநொச்சி – முல்லைத்தீவு பிரதான வீதியின் முரசுமோட்டை பகுதியில் இன்று மாலை 5 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விசுவமடு பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி ஒரு கார் பயணித்துள்ளது. அதேநேரம், வவுனியாவில் இருந்து விசுவமடு நோக்கி ஒரு தனியார் பேருந்து வந்துள்ளது. இரண்டு வாகனங்களும் முரசுமோட்டை பகுதியில் மிக அதிவேகமாக நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த மோதலின் வீரியத்தில் கார் முற்றாகச் சிதைவடைந்ததோடு, அதில் பயணித்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.
காரில் பயணித்த ஐந்து பேரில் நால்வர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் விசுவமடு பகுதியைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ஒருவர் மிக ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, தற்போது கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த கிளிநொச்சி பொலிஸார் உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை முன்னெடுத்தனர். விபத்துக்குள்ளான வாகனங்கள் வீதியில் இருந்து அகற்றப்பட்டுள்ளதுடன், விபத்துக்கான காரணம் குறித்து கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்தை பதிவிட