இலங்கைக்கான கியூபா தூதுவர் கௌரவ ஆண்ட்ரேஸ் மார்செலோ கோன்சாலஸ் அண்மையில் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களை சந்தித்தார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.
கியூபா தூதுவர், சபாநாயகருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, இலங்கையுடனான ஒத்துழைப்புகளை மேலும் விரிவுபடுத்த கியூபா அரசாங்கம் முழுமையாகத் தயாராக இருப்பதாக அறிவித்தார். குறிப்பாக, டெங்கு மற்றும் பிற தொற்றுநோய்களை கட்டுப்படுத்துவதற்காக கியூபா அரசாங்கம் வழங்கிவரும் பொதுச் சுகாதார நிபுணத்துவ உதவிகளை அவர் உறுதிப்படுத்தினார்.
மேலும், கியூபா பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகரின் வாழ்த்துச் செய்தியைக் கொண்ட கடிதத்தையும் தூதுவர், சபாநாயகரிடம் கையளித்தார்.
இலங்கையும் கியூபாவும் 1959 ஆம் ஆண்டு முதல் பரந்தகால இராஜதந்திர உறவை பகிர்ந்து கொள்கின்றன என்பதை நினைவுபடுத்திய சபாநாயகர், இந்த உறவை மேலும் பலப்படுத்தும் உறுதிமொழியை தெரிவித்தார். அதேசமயம், இலங்கையில் டெங்கு ஒழிப்பு முயற்சிகளுக்கு கியூபா வழங்கிவரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.
அத்துடன், இலங்கை அரசாங்கம் அறிமுகப்படுத்திய ‘க்ளீன்ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) திட்டம் குறித்து விளக்கிய அவர், அனைத்து இலங்கையர்களும் இன மத வேறுபாடுகளை தாண்டி ஊழல் இல்லாத, முன்னேறிய நாட்டை உருவாக்க ஒற்றுமையாக செயல்பட வேண்டும் எனக் கூறினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இலங்கை – கியூபா பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை மீண்டும் உருவாக்க வேண்டும் என்றும், இதன் மூலம் இருநாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை இன்னும் மேம்படுத்த முடியும் எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.
கருத்தை பதிவிட