முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள உள்ளூர் உற்பத்தியாளர்களை ஆதரித்து, ‘Made In Mullaitivu’ என்ற புதிய உற்பத்தி மேம்பாட்டு மையம் இன்று (24) காலை 10.00 மணிக்கு முல்லைத்தீவு புதிய பஸ் நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் பிரதம விருந்தினராகவும், வவுனியா பல்கலைக்கழக சந்தைப்படுத்தல் பீடத்தின் பீடாதிபதி யோ.நந்தகோபன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
கனேடிய தமிழர் பேரவையின் நிதி ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டுள்ள இச் செயற்றிட்டம், உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் உற்பத்தி முன்னேற்றம் மட்டுமின்றி, சர்வதேச சந்தை வாய்ப்புகளையும் பெற வழிவகை செய்யப்படும். வெற்றிகரமாக செயல்பட்டால், இது வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கான அடித்தளமாக அமையும் என நம்பப்படுகிறது.
நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன், இலங்கைக்கான கனேடிய தூதரக அதிகாரிகள், கனேடிய தமிழர் பேரவையின் பிரதிநிதிகள், நன்கொடையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் என முல்லைதீவு மாவட்ட செயலக தகவல் மையம் செய்தி வெளியிட்டுள்ளது.
கருத்தை பதிவிட