மாத்தறை மகேஸ்திரேட் நீதிமன்றம் முன்னைய பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் க்கு திறந்த பிடியாணை ஒன்றை பிறப்பித்துள்ளது.
இது குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்கச் செய்யப்பட்டதாகும்.
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட எட்டு பொலிஸ் அதிகாரிகளை கைது செய்யுமாறு மாத்தறை மகேஸ்திரேட் நீதிமன்றம் கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி உத்தரவு பிறப்பித்தது.
2023 டிசம்பர் 31ஆம் திகதி மாத்தறை – வெலிகம – பலேனா பிரதேசத்தில் உள்ள W 15 ஹோட்டலுக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்பாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இச் சம்பவத்தில் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவின் பொலிஸ் சர்ஜெண்ட் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒரு பொலிஸ் அதிகாரி காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது 11 நாட்களாக பொலிசாரால் தேடப்பட்டு வந்த பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அவர்கள், நேற்று (10) தனது சட்டத்தரணிகள் மூலம் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை, மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் செயற்பாட்டு தலைவர் மொஹமட் லஃபார் தாஹீர் மற்றும் சரத் திசாநாயக்க ஆகிய நீதியரசர்கள் கொண்ட அமர்வு நேற்று (10) பரிசீலித்தது.
அதில், பதிலளிப்பவர்களுக்கு அறிவிப்பு வழங்கப்பட்ட பின்னர், இந்த மனுவை மீண்டும் மார்ச் 12ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கருத்தை பதிவிட