யாழ்ப்பாணம், தென்மராட்சி – ஜூன் 17:
மந்துவில் பகுதியில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றிய சம்பவம் ஒன்று இடம்பெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் இன்று பிற்பகல் 2.45 மணியளவில், வரணி வேம்பிராய் வீதியில் அமைந்துள்ள மந்துவில் மருதடி சனசமூக நிலையத்திற்கு அருகாமையில் நிகழ்ந்தது.
தகவல்களில் கூறப்படுவதாவது, வரணி பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர், அருகிலுள்ள ஆலயத்திற்கு சென்று வீட்டுத் திரும்பும் வழியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார். அந்தவேளையில் வீதிக்கு குறுக்காக ஒரு மாடு சென்றதால், மோட்டதில் மோதுவதைத் தவிர்க்கும் நோக்கில் அவர் திடீரென தடுப்பு பிரயோகித்து வாகனத்தை நிறுத்த முயற்சித்தபோது, மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றியதாக பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தீ விபத்தில், அந்த நபரின் உடைகளும் தீயில் சிக்கியதால், அவர் சிறிய எரி காயங்களுடன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் முழுமையாக எரிந்து சேதமடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்தை பதிவிட