பல கோடி முதலீட்டாளரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவருமான எலோன் மஸ்க் புதன்கிழமையன்று சமூக ஊடகமான X (முன்னாள் ட்விட்டர்) இல், “இப்போது ஸ்டார்லிங் இலங்கையில் கிடைக்கிறது!” என்று அறிவித்து, இலங்கையில் ஸ்டார்லிங் சேவை அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டதை உறுதிப்படுத்தினார்.
இத்துடன், ஸ்டார்லிங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கணக்கில் வெளியிடப்பட்ட, “இலங்கையின் முழுமையான வரைபடத்தை காட்டும்” ஒரு பதிவையும் பகிர்ந்தார். அந்த வரைபடத்தில் நாடு முழுவதும் ‘கிடைக்கிறது’ என குறிக்கப்பட்டிருந்தது.
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRCSL, 2024 ஆகஸ்ட் 14 ஆம் தேதி, “தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்” உரிமத்தை Starlink Lanka (Private) Limited நிறுவனத்திற்கு வழங்கியிருந்தது. இதன் மூலம், நாட்டின் அனைத்து பகுதியிலும் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையை வழங்கும் அதிகாரம் கிடைத்துள்ளது.
ஸ்டார்லிங் இணையம் இலங்கையில் தற்போது உள்ள fiber இணைய சேவைகளை விட வேகமாகவும் குறைந்த தாமதத்துடனும் செயற்படுகிறது. இதனால், இணைய அமைப்பு இல்லாத இடங்களிலும் தரமான இணைய சேவை கிடைக்கும் என்பது முக்கிய இலாபமாகும்.
இத்துடன், இலங்கை தெற்காசியாவில் ஸ்டார்லிங் சேவை கிடைக்கும் மூன்றாவது நாடாக உள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளான பூடான் மற்றும் வங்கதேசத்துக்குப் பிறகு, இலங்கையும் இச்சேவையை பெற்றுள்ளது.
இந்தியாவிலும் ஸ்டார்லிங் விரைவில் சேவையை தொடங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்டார்லிங், பூமியைச் சுற்றி சுழலும் செயற்கைக்கோள்களால் இணையத்தை வழங்குகிறது. தற்போது 6,750-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களுடன் உலகிலேயே மிகப்பெரிய செயற்கைக்கோள் கூட்டமைப்பை (satellite constellation) இது இயக்கி வருகிறது.
நிறுவனத்தின் விளக்கத்தின்படி, ஸ்டார்லிங் குறைந்த தாமதத்துடன் (low latency) கூடிய அதிவேக இணையத்தை வழங்குகிறது. இது, தொலைதூர மற்றும் குறைவான இணைப்பு வாய்ப்புகள் உள்ள பகுதிகளுக்கு ஏற்றதாக இருக்கிறது.
ஆசியாவிலேயே, ஸ்டார்லிங் சேவைகள் மங்கோலியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், மலேசியா, இந்தோனேஷியா, ஜோர்டான், யெமன், அசர்பைஜான் உள்ளிட்ட பல நாடுகளில் ஏற்கனவே கிடைக்கிறது.
உலகளாவிய ரீதியில், ஸ்டார்லிங் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயற்படுகிறது. இது குடியிருப்புகளுக்கும் மற்றும் பயணங்களுக்கும் (roaming) இணைய திட்டங்களை வழங்குகிறது.
கருத்தை பதிவிட