லண்டன் | ஜூலை 14:
கொன்ஸ்டன்ஸ் மார்டன் மற்றும் மார்க் கார்டன் ஆகியோர், “மிகவும் கவனக்குறைவான காரணத்தால் கொலை” (gross negligence manslaughter) எனும் குற்றத்தில் இன்று (14 ஜூலை) குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பிரிட்டனில் அரசாங்க நல சேவைகள் தங்கள் குழந்தையின் மீது கட்டுப்பாடு கொண்டுவந்துவிடும் என்பதற்கான பயத்தினால் குழந்தையைப் பிறப்பித்து, பாதுகாப்பின்றி குளிரிலும் பசியிலும் வைத்ததால், இறுதியில் அந்தக் குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் இருவரும் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர்.
2017-இல் தென் அமெரிக்கா சுற்றுலா சென்ற இந்த ஜோடி, சிகா வைரஸ் பரவல் ஏற்பட்ட நாடுகளிலும் பயணித்திருந்தனர். அப்போது மார்டன் கர்ப்பமாக இருந்ததால், மருத்துவமனைகள் அவதானிக்கத் தொடங்கின. ஆனால் அவர்கள் தொடர்ந்து பரிசோதனைகளை தவிர்த்து வந்ததுடன் மூடி மறைந்தனர். சமூக சேவைகள் அவதானிக்குமென பயந்து அலைந்து திரிந்தனர்.
மார்டன் குழந்தையை ரகசியமாகப் பெற்ற பிறகு, அவர்கள் காரொன்றை எரித்து விட்டு நாட்டைச் சுற்றித்திரியும் ஓட்ட வாழ்க்கையைத் தொடங்கினர். 54 நாட்கள் தலைமறைவு. அவர்கள் பாதுகாப்பான இடங்கள் எதையும் நாடாமல், காடுகளில் உறங்கியதற்கான சாட்சியங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இவர்கள் கைது செய்யப்படும்போது குழந்தை காணப்படவில்லை. சில நாட்களுக்குப் பிறகு, ஒரு பிளாஸ்டிக் பையில் விக்டோரியாவின் உடல், காட்டு பகுதியிலுள்ள குப்பைகளின் இடையில் கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தை விக்டோரியா, அதிகமான குளிரால் அல்லது பசியால் இறந்திருக்கலாம் என சோதனை அறிக்கை தெரிவிக்கின்றது.
Old Bailey நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு பலமுறை ஒத்திவைக்கப்பட்டதுடன், இருவரும் சட்டத்தரணிகளை அடிக்கடி மாற்றி சில நேரங்களில் தாங்களே தங்களைச் சுயமாக பிரதிநிதித்துவப்படுத்தியும், சில விசாரணைகளைத் தவிர்த்தும் நடந்துகொண்டனர்.
வழக்கு செலவு மட்டும், அரசுக்கு மூன்று மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இருவருக்கும் விதிக்கப்படும் சிறைத் தண்டனை, 2025 செப்டம்பர் 15 அன்று அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
இச்சம்பவம், குழந்தை நலன்களைப் பற்றி நாம் எவ்வளவு கணிக்கவேண்டும் என்பதையும், தனிப்பட்ட முடிவுகள் எத்தனை பேரழிவுகளை ஏற்படுத்த முடியும் என்பதையும் காட்டுகிறது. தாய் பாசம் என்பது பாதுகாப்பை நன்கு அளிக்கும்போதுதான் அர்த்தமுள்ளதாய் அமையும். சமூக சேவைகளைத் தவிர்ப்பது ஒருவேளை சிலருக்கு சுதந்திரம் போல தோன்றலாம், ஆனால் அதன் விளைவாக ஒரு உயிர் செல்வதாயின், அது ஒருபோதும் மன்னிக்க முடியாத தவறாகும்.
கருத்தை பதிவிட