ரத்தினபுரியில் நடைபெற்ற “சிறந்த தேசம் ஒன்றாக ஒன்றிணைவோம் – பெண்கள் முன்னேறுவோம்” என்ற தலைப்பில் நடைபெற்ற மகளிர் கலந்துரையாடலில் கலந்து கொண்ட பிரதமர் டாக்டர் ஹரினி அமரசூரிய அவர்கள் கல்வி மாற்றம் என்பது வெறும் புத்தக மாற்றம் அல்ல, மாறாக கல்வி அமைப்பையே மீளமைப்பதற்கான முழுமையான சமூக மாற்ற நடவடிக்கை எனக் கூறினார்.
தற்போதைய கல்வி அமைப்பில் மாணவர்கள் மீது பாரமான அழுத்தம் உள்ளது. பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இது மன அழுத்தமாக மாறியுள்ளது. சமூகத்தில் கூட போட்டி மனப்பான்மையை வளர்த்து, மனிதநேயத்தை அழித்து வருகிறது என பிரதமர் சுட்டிக்காட்டினர்.
தேசிய பாடசாலைகள் என்ற பெயரில் பல பள்ளிகளில் வெறும் பெயர் பலகை மட்டுமே மாற்றப்பட்டுள்ளது. “மிகவும் வருத்தமுடன் சொல்கிறேன், அரசியல்வாதிகள் தங்கள் பெயரை வைத்தே கட்டடங்களை திறக்கின்றனர். ஆனால், அந்தக் குழந்தைகள் உள்ளே எப்படிப் படிக்கிறார்கள் என்பது அவர்களுக்கு கவலையே இல்லை” என்றார் ஹரினி.
கல்வியை வைத்து கேவலமான அரசியல் நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டிய பிரதமர், கடந்த ஆட்சி காலங்களில் கல்வி வெறும் அரசியல் விளம்பரத் தளமாக மாற்றப்பட்டதாகவும் அதனால் சிறப்பான ஆசிரியர்களும் கட்டமைப்புகளும் நோக்கமின்றி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதாகவும் கூறினார்.
“நாங்கள் தற்போதைய கல்வியை மாற்றும் அரசியல் இயக்கம் ஒன்றை ஆரம்பித்துள்ளோம். இது வெறும் ‘புத்தக மாற்றம்’ அல்ல. ஆசிரியர் பயிற்சி, பாடசாலை வசதிகள், மாணவர் மனநிலை, பெற்றோர் ஒத்துழைப்பு என அனைத்தையும் ஒன்றாக சீர்திருத்தும் புது பாதை” என ஹரினி வலியுறுத்தினார்.
“இந்த உரையாடல் உங்கள் அனைவருக்கும் சொந்தமானது. சமூகத்தில் இது பரவ வேண்டும். உங்கள் வீடுகளில், தெருக்களில், வேலை இடங்களில் – இந்தக் கல்வி உரையாடலை எடுத்துச் செல்லுங்கள்” என்று பொதுமக்களிடம் பிரதமர் உருக்கமாக கேட்டுக்கொண்டார்.
தமிழ்தீ கருத்து
இது வெறும் ஒரு அரசியல் பேச்சாக இல்லாமல், மாறி வேண்டிய தேவையை உணர்த்தும் ஓர் அறிக்கை. கல்வியை சீர்திருத்துவது என்பது காலத்தால் தேவைப்பட்டு வரும் ஒரு வேலை. இது குழந்தைகளுக்கான இலங்கை எதிர்காலத்தை கட்டும் முயற்சி. ஆனால், சொற்கள் மட்டும் போதாது – செயல்தான் தேவை.
கருத்தை பதிவிட