இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள் பஜர் தொழுகைக்காக ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையில் நடைபெற்றது.
நைஜீரியாவின் வடமேற்கு கட்சினா மாநிலத்தில் ஒரு பள்ளிவாசல் மற்றும் அருகிலுள்ள வீடுகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை குறைந்தது 50 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சுமார் 60 பேர் கடத்தப்பட்டுள்ளனர் என்று உள்ளூர் அதிகாரிகளும் குடியிருப்போரும் புதன்கிழமை தெரிவித்தனர்.
நேரில் கண்டவர்கள் கூறுகையில், மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆயுதம்தாரிகள் பள்ளிவாசலுக்குள் நுழைந்து சுட்டு, பின்னர் கிராமத்தையே சூழ்ந்துள்ளனர்.
மலும்பாஷியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் அமினு இப்ராஹீம் கூறுகையில், குறைந்தது 30 பேர் சுட்டுக் கொல்லப்பட்டு, மேலும் 20 பேர் உயிருடன் எரிக்கப் பட்டதாகவும், இது அந்தக் கிராமத்தின் மீது நடத்தப்பட்ட ஒரு தொடர் கொடூரத் தாக்குதலாகும் என்றும் குறிப்பிட்டார்.
கட்சினா காவல் துறை பேச்சாளர் அபூபக்கர் சாதிக் அலியூ தெரிவித்ததாவது, காவல்துறையினர் தாக்குதலாளர்களை தடுத்து, இன்னும் இரண்டு கிராமங்கள் மீது திட்டமிட்டிருந்த தாக்குதலைத் தடுக்க முடிந்தது. ஆனால் மண்டாவ் வழியாக தப்பியோடியபோது, அவர்கள் பொதுமக்களை நோக்கிச் சுட்டனர். மேலும் பல வீடுகள் தீ வைத்து எரிக்கப் பட்டதாகவும் அவர் கூறினார். உயிர் தப்பியவர்கள், பெண்கள் மற்றும் சிறுமிகள் பலர் தாக்குதலாளர்களால் இழுத்துச் செல்லப்பட்ட கொடூர காட்சிகளைச் சுட்டிக்காட்டினர்.
மக்கள் தொழுகையில் இருந்தபோது அவர்கள் பள்ளிவாசலுக்குள் நுழைந்து சுட ஆரம்பித்தார்கள் என்று குடியிருப்பாளர் முகமது அப்துல்லாஹி கூறினார். “என் அண்டை வீட்டுக்காரர் கொல்லப்பட்டார். நான் அதிர்ஷ்டவசமாக வெளியே வராமல் இருந்ததால் உயிர் தப்பினேன் எனவும் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை, உள்ளூர் பொது மருத்துவமனையின் அதிகாரியான பாத்திமா அபாகர் தெரிவித்ததாவது, 27 உடல்கள் மோர்ச்சரியில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், பலரை உறவினர்கள் எடுத்துச் சென்று இஸ்லாமிய மரபின்படி அடக்கம் செய்ததாகக் கூறினார்.
கடந்த சில ஆண்டுகளாக நைஜீரியாவின் வடமேற்கு பகுதி “கும்பல்கள்” (bandits) என அழைக்கப்படும் குழுக்களின் தாக்குதலுக்கு ஆளாகி வருகிறது. இவர்கள் கிராமங்களையும் நெடுஞ்சாலைகளையும் குறிவைத்து, பொதுமக்களை கடத்தி விடுவிப்பதற்காக பேரம் பேசுகின்றனர். மேலும் விவசாயக் கிராமங்களை அச்சுறுத்தி வசூல் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Source-Ada Derana
கருத்தை பதிவிட