நேபாளத்தில் ஜெனரேஷன் Z தலைமையில் நடைபெற்று வரும் போராட்டங்கள் தீவிரமடைந்ததை அடுத்து நேபாள இராணுவம் தடை உத்தரவு மற்றும் நாடு முழுவதும் ஊரடங்கை அறிவித்துள்ளது.
இராணுவ பொது தொடர்பு மற்றும் தகவல் இயக்ககம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், இன்று (புதன்கிழமை) மாலை 5.00 மணி வரை தடை உத்தரவு அமலில் இருக்கும் எனவும், அதன் பின்னர் நாளை (வியாழக்கிழமை – பத்ர 26/செப்டம்பர் 11) காலை 6.00 மணி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நிலைமைகளைப் பொறுத்து அடுத்தடுத்த முடிவுகள் எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், போராட்டங்களின் போது உயிரிழப்புகள் மற்றும் சொத்துச் சேதங்கள் ஏற்பட்டிருப்பதற்கு இராணுவம் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளது. அதேவேளை, இதுவரை சட்டமும் ஒழுங்கும் பேணுவதில் ஒத்துழைத்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது.
அதிகாரிகள் தெரிவித்ததாவது, போராட்டங்களுக்குள் ஊடுருவிய அனார்க்கிசக் குழுக்கள் தீவைத்தல், கொள்ளை, பொது மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தல், குறிவைத்து வன்முறைகள் மற்றும் பாலியல் தாக்குதல் முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். “போராட்டம் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் இத்தகைய குற்றச்செயல்கள் அனைத்தும் தண்டனைக்குரியவையே; பாதுகாப்புப் படையினர் மீது நடவடிக்கை எடுப்பார்கள்” என இராணுவம் எச்சரித்துள்ளது.
ஊரடங்கு காலத்தில் ஆம்புலன்ஸ், சவப்பெட்டி வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு மட்டும் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவசரத் தேவைகளில் அருகிலுள்ள பாதுகாப்பு அதிகாரிகளுடன் பொதுமக்கள் ஒருங்கிணைந்து கொள்ளும்படி இராணுவம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், ஓய்வு பெற்ற இராணுவத்தினர், அரசு ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் தவறான தகவல்களை நம்பாமல், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளையே நம்புமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய ஒருமைப்பாட்டை பாதுகாக்கவும், சமூக ஒற்றுமையை பேணவும், குடிமக்களைப் பாதுகாத்து மனிதாபிமான உதவிகளை வழங்குவதிலும் பாதுகாப்புப் படைகளுக்கு ஒத்துழைக்கவும் அனைத்து நேபாள மக்களையும் இராணுவம் அழைப்பு விடுத்துள்ளது
Source: The Himalayan
கருத்தை பதிவிட