இலங்கையில் கடன் அட்டைப் நிலுவைகள் ஜூலை மாதத்தில் மந்தமான அளவில் அதிகரித்துள்ளன. எனினும் குறைந்த வட்டி விகிதங்களும், நுகர்வோர் நம்பிக்கையும் அதிகரித்ததன் விளைவாக மொத்தக் கடன் வளர்ச்சி சுறுசுறுப்பாக முன்னேறியுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஜூலை மாதத்தில் கடன் அட்டைப் நிலுவைகள் ரூ.373 மில்லியனாக உயர்ந்துள்ளன. இது ஜூன் மாதத்தில் பதிவான ரூ.539 மில்லியனையும், மே மாதத்தில் பதிவான ரூ.534 மில்லியனையும் விட குறைவானதாகும்.
இதன் மூலம் 2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் கடன் அட்டைப் நிலுவையின் மொத்த உயர்வு ரூ.3.23 பில்லியனாகும். ஜூலை இறுதியில் மொத்த நிலுவை ரூ.161.28 பில்லியனாக பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தை ஒப்பிடுகையில் 7.7 சதவீத அதிகரிப்பாகும்.
நிபுணர்கள் சுட்டிக்காட்டியதாவது, கடன் அட்டைப் நிலுவை வளர்ச்சி மந்தமடைதல், குடும்பங்களின் நிதி நிலைமை வலுவடைந்ததைக் குறிக்கிறது. அதிக செலவினங்கள் இருந்தபோதும், மக்கள் அதிக வட்டி (சுமார் 26%) கொண்ட கடன் அட்டைப் நிலுவைகளைத் தவிர்த்து, குறைந்த வட்டி (சுமார் 15% அல்லது அதற்கு குறைவான) கொண்ட பிற நுகர்வோர் கடன்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
அட்டைப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், வங்கிகள் குறுகிய கால தனிப்பட்ட கடன்களை ஒத்த தவணை வசதிகள், சம தவணை அடிப்படையிலான பண முன்கூட்டியளிப்பு திட்டங்கள் போன்றவற்றை அறிமுகப்படுத்தியுள்ளன.
ஜூலை மாதத்தில் மட்டும் 12,325 புதிய கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இது, ஆண்டின் முதல் பாதியில் பதிவான மாத சராசரி (11,200) எண்ணிக்கையை விட அதிகமாகும்.
மொத்தச் செயல்பாட்டிலுள்ள கடன் அட்டைகளின் எண்ணிக்கை ஜூலை இறுதியில் 2.09 மில்லியனாக உயர்ந்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் மட்டும் 79,613 புதிய அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
கருத்தை பதிவிட