கல்வி என்பது வெறும் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்காக மட்டுமல்ல, வாழ்க்கையை மாற்றி அமைக்கும் சக்தியாக இருக்க வேண்டும் என்று பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.
கண்டி மஹாமாயா மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் தொடக்க அமர்வு ஜனாதிபதி செயலகத்தின் பழைய பாராளுமன்ற மண்டபத்தில், பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய மற்றும் துணை சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலிஹ் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், “மாணவர்களின் மீது தேவையற்ற சுமைகளை ஏற்படுத்தும் பழைய கல்வி முறையை மாற்றி, மனிதாபிமானம், பொறுப்பு மற்றும் சமூக பங்களிப்பை வலியுறுத்தும் புதிய கல்வி பாதை ஒன்றை உருவாக்குவது அவசியம்,” எனக் குறிப்பிட்டார்.
அத்துடன், “எங்கள் நோக்கம் புத்தக அறிவைத் தாண்டி, உலகத்தை மேம்படுத்தும் திறனை உடைய குடிமக்களை உருவாக்குவதாகும்,” என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், துணை சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலிஹ் தனது உரையில், “சட்டத்தை மதிக்காத ஒருவர் ஒருபோதும் சட்டமன்ற உறுப்பினராக முடியாது. ஒவ்வொருவரும் சட்டத்தைக் கடைப்பிடிக்கும் சமூகத்தை உருவாக்க உறுதியாக இருக்க வேண்டும்,” என வலியுறுத்தினார்.
அவர் மேலும், பல ஆண்டுகள் இலங்கையின் பாராளுமன்றமாக விளங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க மண்டபத்தில் இத்தகைய நிகழ்வு நடப்பது மாணவர்களுக்கு பெருமைக்குரிய அனுபவம் எனக் குறிப்பிட்டார்.
அமர்வின் பின்னர் மாணவர் பாராளுமன்ற சபாநாயகர் பதவியேற்று சத்தியப்பிரமாணம் செய்தார். தொடர்ந்து மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவியேற்றனர்.
மாணவர் பாராளுமன்றத்தின் பிரதமரும் அமைச்சர்களும் தங்களது உரைகளை நிகழ்த்தியதையடுத்து அமர்வு நிறைவு செய்யப்பட்டது என நாடாளுமன்ற தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்தை பதிவிட