யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகக் கட்டிடத்தின் மேற்கூரைப் பகுதியில் ரி-56 ரக துப்பாக்கி ஒன்றும் அதனுடன் தொடர்புடைய உபகரணங்களும் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முழு வளாகமும் பாதுகாப்பு அம்சங்களின் கீழ் விரிவாகச் சோதிக்கப்பட்டு வருகிறது.
நேற்று (30) நூலகத்தின் கூரையில் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்தபோது, இரண்டு மெகசின்களும் சில வயர்களும் முதலில் தொழிலாளர்களால் கண்டறியப்பட்டன. இதையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக கோப்பாய் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தது.
பின்னர், காவல்துறையினரும் விசேட அதிரடிப் படையினரும் சம்பவ இடத்துக்குச் சென்று அவை அகற்றப்பட்டன. ஆனால், இன்று (31) காலை தொடர்ந்த திருத்தப் பணிகளின் போதும் அதே பகுதியில் ரி-56 துப்பாக்கி, இரண்டு மெகசின்கள், வயர்கள் மற்றும்
சில மருத்துவப் பொருட்கள் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டன.
இதன் அடிப்படையில், பல்கலைக்கழக வளாகம் முழுவதும் விசேட அதிரடிப் படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து விரிவான தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், ஒவ்வொரு பகுதியும் நுணுக்கமாகச் சோதிக்கப்பட்டு வருகிறது.
பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு உறுதிப்படுத்தி, தேவையற்ற வதந்திகளை பரப்பாமல் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்புமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
கருத்தை பதிவிட