ஜப்பானின் கியூஷூ தீவில் அமைந்துள்ள ஓயிட்டா நகரில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட பேரத்தீவிபத்து, குடியிருப்புப் பகுதியை முற்றிலுமாக சூழ்ந்தது. பலத்த காற்றின் காரணமாக வேகமாகப் பரவிய இந்த தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் லேசாகக் காயமடைந்துள்ளார்.
ஓயிட்டா மாகாண பேரிடர் மேலாண்மை பிரிவு தெரிவித்ததாவது, 70 வயது மதிக்கத்தக்க ஆணொருவர் காணாமற்போயிருந்த நிலையில், மீட்புப்படை கண்டெடுத்த உடல் அவருடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 50 வயதான பெண் ஒருவர் லேசான காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
தீ ஏற்பட்ட 20 மணி நேரத்திற்குப் பின்னரும் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வராத சூழலில், 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், டஜன் கணக்கான தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஜப்பான் தரைக்கரப் படையின் இரண்டு UH-1 ஹெலிகாப்டர்கள் தீயணைப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
இந்த தீவிபத்தில் குறைந்தது 170 வீடுகள் சேதமடைந்ததோடு, 260 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாக்கரல் மீன்பிடிக்குப் பிரபலமான கடலோரப் பகுதியைச் சுற்றி ஏற்பட்ட இந்த தீ, 4.9 ஹெக்டேருக்கும் மேற்பட்ட காடு பகுதிகளையும் பாதித்துள்ளது.
ஜப்பானிய தொலைக்காட்சி காட்சிகளில், கருகிய வீடுகள் மற்றும் புகை மூட்டமடைந்த கிராமப்புறப் பகுதிகள் தென்பட்டன. மதியம் நேரத்திலும் புகை எழுந்த நிலையில், பெரிய தீச்சுடர்கள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன.
தீ எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஜப்பான் பிரதமர் ஸனயே தகாய்ச்சி, சமூக வலைத்தளமான X-ல் பதிவிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபம் தெரிவிப்பதோடு, அரசு “அதிகபட்ச உதவியை வழங்கும்” என உறுதியளித்தார்.
Source: Ada Derana
கருத்தை பதிவிட