வெனிசுவலா ஜனாதிபதி நிக்கோலாஸ் மடூரோ அமெரிக்க படைகளால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு முக்கிய தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது. அதன்படி, துணைத் தலைவர் டெல்சி ரொட்ரிகஸ் இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டின் நிர்வாகத் தொடர்ச்சியையும், தேசிய பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. “வெனிசுவலா போலிவேரிய குடியரசின் ஜனாதிபதி பதவியை, தற்போதைய சூழ்நிலையில் தற்காலிகமாக டெல்சி ரொட்ரிகஸ் ஏற்க வேண்டும்” என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜனாதிபதி மடூரோ கட்டாயமாக இல்லாத நிலையில், அரசு நிர்வாகத்தின் தொடர்ச்சி, மாநிலத்தின் நிலைத்தன்மை மற்றும் இறையாண்மை பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில், பொருந்தக்கூடிய சட்ட கட்டமைப்பை தீர்மானிப்பதற்காக இந்த விவகாரம் விரிவாக ஆராயப்படும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில், அமெரிக்க படைகள் மேற்கொண்ட நடவடிக்கையை வெனிசுவேலா அரசு கடுமையாக கண்டித்துள்ளது. இது நாட்டின் இறையாண்மையை மீறும் செயல் என இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரொட்ரிகஸ் குற்றம்சாட்டியுள்ளதுடன், நிக்கோலாஸ் மடூரோவை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் வெனிசுவேலாவின் அரசியல் வரலாற்றில் புதிய திருப்பமாக கருதப்படுவதுடன், சர்வதேச அரசியல் அரங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகள் இந்த விவகாரத்தை கவனமாக கண்காணித்து வருகின்றன.
கருத்தை பதிவிட