நாட்டில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த 2025ஆம் ஆண்டுக்கான பொது உயர்தரப் பரீட்சை (GCE A/L) மீதமுள்ள பாடங்களுக்கான பரீட்சைகள் இன்று (12) முதல் ஆரம்பமாகின்றன.
பரீட்சைகள் ஜனவரி 20ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார். இதற்காக தீவு முழுவதும் 2,086 பரீட்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 325 ஒருங்கிணைப்பு மையங்களும் 32 பிராந்திய மையங்களும் செயல்படுகின்றன.
இதற்கிடையில், பேரிடர் காரணமாக தேசிய அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் அல்லது கடவுச்சீட்டு போன்ற அடையாள ஆவணங்களை இழந்துள்ள தேர்வாளர்கள், தற்காலிக அடையாளச் சான்றிதழ் ஒன்றை சமர்ப்பித்து பரீட்சையில் தோற்ற அனுமதி வழங்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், முன்பு அறிவிக்கப்பட்ட பரீட்சை நேர அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை என்றும், திருத்தப்பட்ட கால அட்டவணையிலும் அதே நேரங்களே நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வாளர்கள் பரீட்சை ஆரம்பிக்கும் நேரத்திற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன்னதாக பரீட்சை மையத்துக்கு வருகை தர வேண்டும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.
— தமிழ் தீ செய்தியாளர்
கருத்தை பதிவிட