பொலன்னறுவை மாவட்டத்தின் வெலிகந்த பகுதியில், கூரிய ஆயுதம் கொண்டு காவல்துறையினரை தாக்க முயன்றதாகக் கூறப்படும் 28 வயதுடைய ஒருவர், காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இன்று பிற்பகல் வெலிகந்த பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று நபர்களை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர். ஆனால் அந்த உத்தரவை மீறி, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தப்பிச் சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, சந்தேகநபரை அவரது இல்லம் வரை காவல்துறையினர் பின்தொடர்ந்து சென்றபோது, அவர் மச்செட்டி (கூரிய கத்தி) கொண்டு காவல்துறையினரை தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அந்தச் சூட்டில் சந்தேகநபருக்கு காலிலும் மார்பிலும் துப்பாக்கி குண்டுக் காயங்கள் ஏற்பட்டதுடன், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த சந்தேகநபர் மீது முன்னதாக போதைப்பொருள் தொடர்பான ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்ததுடன், அவருக்கு எதிராக மேலும் இரண்டு குற்ற வழக்குகள் தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்ற இரு நபர்களை கண்டறியும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Source:-Ada Derana
கருத்தை பதிவிட